• Sat. Apr 27th, 2024

18 மாவட்டங்களில் இன்று கனமழை

ByA.Tamilselvan

Nov 6, 2022

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளையும் (நவ.7-ம் தேதி), நாளை மறுதினமும் (8-ம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 9-ம் தேதி (புதன்கிழமை) வங்கக் கடல் பகுதியையொட்டி இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருக்கிறது. இது, அதற்கடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் நகர உள்ளது. அதன் காரணமாகவும் வரும் நாட்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சூழல் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *