• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தலையில்லா புத்தர் சிலை, தலையைத் தேடும் முயற்சி.,

ByS. SRIDHAR

Aug 26, 2025

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும் , தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து தொல்லறிவியல் துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு. இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு களப்பணியாற்றி வருகிறோம். கள ஆய்வில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
தலையில்லா புத்தர் சிலை ஆவுடையார்கோவில் எல்லைக்குட்பட்ட பெரிய பாசனக்குளத்தின் அருகிலேயே கருங்கல்லாலான இந்த புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இச்சிலையை மக்கள் தலையில்லா சாமி என்று அழைப்பதோடு, இதற்கு களி மண்ணில் தலையை செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதை அறிய முடிகிறது.
காலம் :
பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்ப உருவ அமைதியுடன் காணப்படுகிறது
சிற்ப தோற்றம் :

புத்தர் சிலை 48 செமீ உயரமும், 38 செ .மீ அகலமும் கொண்டு, பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. வலது மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, கழுத்தில் திரிவாலி, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின் மீது வானோக்கிய வலது கையமைப்புடன் உள்ளது. கழுத்தின் பக்கவாட்டில் பின்புறமாக உடைந்த நிலையில் பிரபையின் அடிப்பகுதி உள்ளது. வலது கையின் கீழ்ப்பகுதி சிதைந்துள்ளது.
தலையைத்தேடும் முயற்சி :

சிலையின் தலைப்பகுதி அருகிலிருக்கும் வாய்க்காலில் இருந்ததாக மக்களிடம் விசாரித்த போது கூறுகின்றனர், ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. தொடர் களப்பணியின்போது கண்டுபிடிக்க முடியுமென நம்புகிறோம்.
புத்தமித்திரர் வாழ்ந்த பகுதி :

சோழர் காலத்தில் புத்த மத வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய புத்த மித்திரர் , ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பொன்பேத்தி எனும் பொன்பற்றி எனும் ஊரைச் சேர்ந்தவர், அவ்வூரில் இன்றளவும் அவரது பெயரில் அகழியுடன் கோட்டை போன்ற அமைப்பு காணப்படுகிறது, சோழ மன்னர் வீர ராஜேந்திரன் காலத்தில் அவரை பெருமைப்படுத்தும் விதத்தில் வீர சோழியம் எனும் இலக்கண நூலை புத்தமித்திரர் எழுதினார் , இக்காலத்தில் புத்த மதம் இப்பகுதியில் செழுமையுடன் இருந்திருப்பதை இக்கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது.
கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் :
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள கரூரில் நிலவளமுடைய அய்யனார் கோயிலில் ஒரு புத்தர் சிலையும், இரண்டாவது புத்தர் சிலை மணமேல்குடி அருகே வன்னிச்சிப்பட்டினத்தில், புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியக இணை இயக்குனர் பொறுப்பு வகித்த முனைவர் ஜெ.ராஜா முகமது, 2002 ஆம் ஆண்டு கண்டறிந்த நிலையில் அச்சிலை, 2008 இல் ஆய்வாளரால் சிலை காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோழ நாட்டில் 60 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை சோழ நாட்டில் பௌத்தம் (2022) எனும் நூலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ள முனைவர் பா.ஜம்புலிங்கம் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கே நேரில் வந்திருந்து, தற்போதைய கண்டுபிடிப்பு புத்த சமய வரலாற்றில் மிக முக்கியமான சான்று என்பதை உறுதி செய்துள்ளார்,
இந்தத்தொடர் ஆய்வின்போது உள்ளூர் வரலாற்று ஆர்வலர் ஓர் நாழிகை ரமேஷ்குமார், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் இணைச் செயலாளர் பீர்முகம்மது, துணைத்தலைவர் கஸ்தூரிரெங்கன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உறுப்பினர்கள் இளங்கோவன் நலங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் , பத்திரிகையாளர்கள் பகத்சிங், சுரேஷ் ஆகியோர் ஆய்வுக்கு உதவினர் , என்றார் .