கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான பி.பி.ஜி.பிசியோதெரபி மற்றும் பார்மசி கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில்,பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியின் இருபதாவது ஆண்டு மற்றும் பார்மசி கல்லூரியின் முதலாம் ஆண்டு என இரு கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எல் பி தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், தாளாளர் சாந்தி தங்கவேலு மற்றும் துணைத் தலைவர் அக்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் .டாக்டர் நாராயணசாமி,கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிசியோதெரபி மற்றும் பார்மசி படிப்பின் அவசியத்தையும் மருத்துவத்துறையில் அவர்களது இன்றியமையாத பங்கினை பற்றியும் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மருத்துவ துறையில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், தற்போதைய காலத்தில் மருந்துகள் மனித வாழ்விற்கு இன்றியமையாதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே இந்த துறையை தேர்வு செய்து பட்டம் வாங்கி செல்லும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து பிசியோதெரபி துறை சார்ந்த 450 மாணவ,மாணவிகள் மற்றும் பார்மசி துறையில் 150 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மேலும் கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் அளித்து கவுரவித்தார்.
விழாவில் பிசியோதெரபி கல்லூரி முதல்வர் சிவக்குமார்,பார்மசி கல்லூரி முதல்வர் சாம், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் கேப்டன் அமுத குமார், உட்பட துறை சார்ந்த தலைவர்கள்,பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.