தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை அவசரபயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.இருவரின் பயணமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது
தமிழ்நாடுபாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி. விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதிஆகியோர் பாஜகவிலிருந்து விலகிஎடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறும் மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பிற கட்சிகளிலும் குறிப்பாக அதிமுகவிலும்சேர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிமுக, பாஜக கூட்டணி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமையே முடிவெடுக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கூறி வருவதால், கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் கூட அண்ணாமலையின் டெல்லி பயணம் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
மறுபுறம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். தமிழக அரசு மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்ப இருக்கும் நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார்.
ஒரே நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் டெல்லி செல்ல இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.