முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாவட்டத்துக்கு வந்த முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார பேனா ஊா்திக்கு பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பன்முகத்தன்மையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளா் கலைஞா் குழுவின் மூலம் முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்தி வலம் வருகிறது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணம், அனைத்து மாவட்டத்துக்கும் சென்று, டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. கருணாநிதி பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊா்தி, இன்று கோவை கொடிசியா மைதானத்திற்கு வந்தடைந்தது. அலங்கரிக்கப்பட்ட முத்தமிழ் தேர் ஊர்திக்கு மேள தாளங்கள் முழங்க மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்த்குமார், அரசு பள்ளி மாணவ மாணவிகள், திமுகவினர் உள்ளிட்டோர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அதற்குள் வைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த கலைஞரின் அரசியல் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை கண்டு களித்தனர். மேலும் சிலர் ஊர்திக்கு முன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
