

கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்’ என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வயிற்றில் சிசு இறந்து விட்ட நிலையில், பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி அலட்சியம் காட்டியுள்ளார். பின், தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொண்டது அரசு டாக்டர் ஜோதிமணி என்பதை அறிந்து, பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார்; திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் புகார் அளித்தார்.
இடமாற்றம் கலெக்டர் நடவடிக்கையின்படி, கட்டணம் பெறும் நோக்கில், நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், ”கர்ப்பிணியிடம் பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாயை, டாக்டர் ஜோதிமணி திருப்பி அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் மேலும் கூறிய போது, ‘சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ‘டாக்டர் ஜோதிமணி மீது துறை சார்ந்த விசாரணையும் நடந்து வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கும்’ என்றார்.