

அமலாக்கத்துறையால் கைது செய்யப்ட்டு, புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜியின் ஆடம்பர வசதிகளுக்காக கூகுள் பே மூலம் போலீசாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை காரணமாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். தற்போது அவரை மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பு கைதியாக புழல் சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார் .
இந்நிலையில், விதிகளை மீறி டிஐஜி ஒருவர் செந்தில் பாலாஜியை சிறையில் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்கு விரும்பிய உணவு வேண்டிய உதவிகள் ஆகியவற்றைச் செய்து கொடுக்க காவலர் ஒருவருக்கு கூகுள் பே மூலம் 30000 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணுடன் சிறைக்காவலர் ஒருவரின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அந்த அலைபேசி எண் நிரந்தரமாக ஒரு காவலரிடம் இருக்காது. பணியில் இருக்கும் ஏதாவது ஒரு காவலர் அந்த எண்ணை வைத்திருப்பார். சிறைக் கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து இந்த அலைபேசி எண் மூலமாகத்தான் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றும் அமலாக்கத்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறைக் காவலர்களுக்கும், செந்தில் பாலாஜிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
