ஈஷாவிற்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு சத்குருவின் வழிகாட்டுதலில் இலவசமாக யோகா மற்றும் தியான வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காகவே ஈஷா மைய வளாகத்தில் 2 பிரத்யேகமான இடங்கள் இயங்கி வருகின்றன. ஆதியோகி வளாகத்தில் ‘யோகாலயம்’ மற்றும் தியானலிங்க வளாகத்தில் ‘சாதனா ஹால்’ ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக இலவச யோகா மற்றும் தியான வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த வகுப்புகளில் உபயோகா, யோக நமஸ்காரம், நாடி சுத்தி, மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானம் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. இதில் கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆடி மாதம், தீபாவளி, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஈஷா யோகாவின் அடிப்படை யோகா வகுப்பான ‘ஷாம்பவி மஹா முத்ரா’ பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் கடந்தாண்டு ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ எனும் இலவச தியான செயலியை சத்குரு அறிமுகம் செய்தார். இந்த இலவச செயலியை பதிவிறக்கம் செய்து வெறும் 7 நிமிடங்களில் மக்கள் தியானம் மேற்கொள்ள முடியும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உலக மனநல தினம், உலக தியான தினம் உள்ளிட்ட நாட்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச தியான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த தியான நிகழ்ச்சிகளில் இதுவரை 90,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் இந்த இலவச தியான வகுப்புகள் நடத்தப்பட்டன.










