• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தெரு நாய், வளர்ப்பு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

ByT.Vasanthkumar

Apr 22, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பதினைந்து இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம்களை பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் தொடக்கமாக அன்னமங்கலத்தில் கால்நடைத்துறை மூலமாக இன்று நடைபெற்ற இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் 103 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ரேபிஸ் எனப்படும் வெறிநோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் கடிக்கும் பொழுது, எல்லா பாலூட்டிகளிலும் மாடு, ஆடுகள் இதர நாய்கள் போன்ற பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பரவும் நோயாகும். உலகில் ஆண்டுதோறும் 50,000 க்கும் மேலானோர் வெறி நோய் பாதிப்பினால் இறக்கிறார்கள். இதில் 80 சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரேபிஸ் நோய் பொருளாதாரத்தில் பின் தங்கிய கீழ்தட்டு மக்கள் மற்றும் குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. வெறிநோய் கொண்ட நாய்கள் கடிப்பதன் மூலம் அதன் உமிழ்நீரில் உள்ள வைரஸ் கிருமிகள் அடிபட்ட காயத்தின் மூலம் நரம்புகளை அணுகி கிருமிகள் பல்கி பெருகி நரம்பு மண்டலம் மூலம் மூளையை தாக்கி பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்நோயினை நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கும், வெறிநோய் தடுப்பூசி வருடாந்திர கால இடைவெளியில் போடுவதன் மூலம் தடுக்கலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன.இந்த நாய்களினால் சமீப காலங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களையும், கால்நடைகளையும் வெறி நோய் தாக்குதலுக்கு உட்படுகின்றனர். இந்த வெறிநாய் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை காப்பாற்றுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியதன்படி, கால்நடை பராமரிப்பு துறையும், மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து விலங்கு நல அமைப்புகளோடு இணைந்து மாவட்டம் தோறும் கிராமங்களில் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், இன்று (22.04.2025) வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில், அன்னமங்கலம் கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செல்லப் பிராணிகளுக்கும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் R۔A۔I۔N۔ என்ற அமைப்பும் உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறையின் வாகனம் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இலவச வெறிநோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 47 செல்லப் பிராணிகளுக்கும் 56 தெருநாய்களுக்கும் விலங்கின நல வாரியத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது‌‌. மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக வெறிநோய் தாக்குதல் குறித்து விழிப்புணர்வும் ஒளிப்பட காட்சிகளுடன் படங்களுடன் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாம் போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மேலும் பதினைந்து முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்ப்போர்கள் முகாம்களை முழு அளவில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் செல்லப் பிராணிகளையும், தங்களையும் வெறி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.பகவத்சிங், துணை இயக்குநர் மரு.ஆர்.எஸ்.டி.பாபு, உதவி இயக்குநர்கள் மரு.மூக்கன், மரு.குமார், வேப்பந்தட்டை கால்நடை உதவி மருத்துவர் மரு.ராமன், ரெயின் அமைப்பைச் சார்ந்த வித்யாலட்சுமி, கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.