• Fri. May 3rd, 2024

முன்னாள் எம்.பி மு.க.அழகிரி – பொன்முடி சந்திப்பு

Byவிஷா

Dec 23, 2023

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடியை, முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை நேற்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேவேளை, இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வழக்கு தொடர்பான மேல்முறையீடு உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை அவரது சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி இன்று சந்தித்தார். இருவரும் சுமார் அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியை, மு.க. அழகிரி சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *