• Sat. May 4th, 2024

எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய புத்தகங்கள் தான் அடையாள அட்டை.., வெ.இறையன்பு

Byவிஷா

Oct 13, 2023

எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய புத்தகங்கள் தான் அவர்களின் அடையாள அட்டை என முன்னாள் தலைமை செயலர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் “எழுதுக” எனும் புத்தகம் எழுதும் அமைப்பு சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட இளம் படைப்பாளிகள் எழுதிய 150 புத்தகங்கள் வெளியிடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பேரனும் எழுத்தாளருமான ஷேக் தாவூத் தலைமை தாங்கினார்.  தமிழக அரசு முன்னாள் தலைமை செயலர் வெ. இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 150 புத்தகங்களை வெளியிட்டுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,
எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் நம்முடைய எழுத்துகளை புத்தகமாக பதிப்பித்து பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. நூல் எழுதுவது ஒரு தவம். நம்முடைய சிந்தனையும், மனதும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் தான் ஒரு சிறந்த நூலை எழுத முடியும்.
நாம் இன்று எழுதிய நூல்கள் அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. எழுத்தாளர்கள் அனைவருக்கும் உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லை. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் முதலில் பலரால் நிராகரிக்கப்பட்ட பின்பு தான் அதற்கான தகுந்த அங்கீகாரம் கிடைத்தது.
அதனால் எழுத்தாளர்கள் அனைவரும் தோல்விகளை கண்டு மனம் தளர்ந்து விடாதிர்கள். என்றும் பரிசுக்காக எழுதாதீர்கள். உங்கள் உள்ள மகிழ்ச்சிக்காக எழுதுங்கள். அப்படி எழுதப்படும் நூல்கள் தான் சிறந்த நூலாக மாறும். எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதும் நூல்கள் தான் அடையாள அட்டை. எழுத்தாளர்கள் மறைந்தாலும் அவர்கள் எழுத்துகள் காலந்தோறும் அவர்களை நினைவுபடுத்தும்.
எழுத்தும் வாசிப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள். புத்தங்கள் வாசிக்க யாரும் இல்லை என்றால் எழுதுவதால் பயனில்லை. புத்தகங்கள் எழுத முதலில் பல்வேறு புத்தகங்கள் நாம் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நம்மை சுற்றி நடப்பதை கவனித்தாலே பல கதைகள் கிடைக்கும். அதில் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து புத்தகமாக எழுதுங்கள்.
தினமும் ஒரு பக்கம் எழுதினால் போதும் மாத இறுதியில் அது நூலாக மாறிவிடும். ஒரு நூலுக்கு 100, 200 பக்கங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 10 பக்கங்கள் இருந்தாலே போதும். ஒரு நூலின் பக்கங்களை வைத்து அதன் சிறப்பு பதிப்பிடுவதில்லை. நூலில் இருக்கும் எழுத்துக்களை வைத்து அதன் சிறப்பு மதிப்பிடப்படுகிறது. ஒரு நூலை நாம் எத்தனை முறை திருத்துகிறோமோ அந்த அளவுக்கு அதன் சிறப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *