• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை

மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி நடக்க நடைபாதையின் இருபுறங்களிலும் கைப்பிடிகள் போலவே மரத்தால் அழகுற அமைக்கப்பட்டு இருக்கிறது. மணற்பரப்பில் இருந்து சற்று உயரம் கூட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையில் எந்தவித சிரமமும் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம். மேலும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த நடைபாதை வழியாக சென்று கடல் அழகை ரசித்து மகிழலாம். இதற்காக சர்வீஸ் சாலையில் இருந்து நடைபாதைக்கு இருபுறத்திலும் சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்த நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை இன்று அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து இந்த நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.