• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் கால்பந்து போட்டி

BySeenu

Apr 1, 2024

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் 10 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி கோப்பையை வென்றது.

கோவை ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் கால்பந்து மன்றம் (RaK’s Football Club) சார்பில் நடைபெற்று வந்த ‘கோல்டன் பேபி லீக் – 2024’ கால்பந்து போட்டியின் இறுதி சுற்று நடைபெற்றது.

பள்ளியின் கால்பந்து அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதி சுற்று போட்டியில் ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், ஆரஞ்சு வாரியர்ஸ் அணியும் மோதினர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் அஜீத் குமார் கலந்துகொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி, இறுதி சுற்றை ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அரீனாவின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் ஆனைமலைஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆரஞ்சு வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டி குறித்து சுவேதா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் பயிலும் 10 வயதுக்கு உட்பட்ட மாணவ. மாணவிகளுக்குள் இருக்கும் விளையாட்டு திறமையை வெளிகொண்டுவரவும், அதேசமயம் அவர்கள் கவனம் மொபைல் போன்/டிவி என செல்வதை விட விளையாட்டு மைதானத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த போட்டியை நடத்தலாம் என 6 மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டோம்.

ஜனவரி 1 இதற்கான அணிகளை உருவாக்கிடவும் உரிமைகொள்ளவும் விருப்பமுள்ள பெற்றோர்களை முன்வர அழைத்தோம். அதன் படி 6 பெற்றோர் முன்வந்து ரெட் ஜயண்ட், கோட் கேங், ஆரஞ்சு வாரியர்ஸ், வி லிட்டில், ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் ஆனைமலை ஸ்ட்ரைக்கர்ஸ் என 6 அணிகளை உருவாக்கி, உரிமையேற்றனர்.
மேலும் அவர்கள் தங்கள் அணிகளின் வீரர்களை ஏலம் எடுக்கப்பட்டன.

இந்த கால்பந்து போட்டியில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்கள் 6 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகளை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விளையாடிவந்தனர். அவர்களுக்கென தனி தனி பயிற்சியாளர்கள் உள்ளனர். அணிகளின் உரிமையாளர்கள் மாணவர்களுக்கான தேவைகளை கவனித்துக்கொண்டனர்.

இந்த போட்டிகள் மூலமாக மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை அறிந்துகொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் முடிந்தது. பலரும் தங்கள் தன்னம்பிக்கை அளவு இதனால் உயர்ந்ததாக உணர்ந்தனர்.

இது முதல் வருடம் என்பதால் 6 அணிகள் உள்ளன. எங்கள் பள்ளியில் கால்பந்து மீது ஆர்வம் கொண்ட மாணவர்கள் அதிகம் உள்ளனர் என்பதாலும் வரும் ஆண்டுகளில் இந்த 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியை மேலும் சிறப்பாக முன்னெடுக்க திட்டமிருப்பதாலும் அடுத்த ஆண்டு கூடுதல் அணிகள் இடம்பெற முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.