மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு “ஈட் ரைட் மில்லட் மேளா”, நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கன் கல்லூரியில் உணவுத்துறை பயிலும் மாணவ, மாணவிகள் சிறுதானியங்களை கொண்டு தயாரித்த பல்வேறு விதமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு சுவைக்கு கொடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி, கிரிஸ்டோபர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராமபாண்டியன் துவங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாநகராட்சி ஆணையர் பிரவீண்குமார் பார்வையிட்டு உணவுகளை ருசித்து சிறுதானிய உணவுகளின் நன்மை குறித்து மாணவிகளிடம் எடுத்து கூறினார்.
இந்த சிறுதானிய உணவு திருவிழாவில் சாமை பிரியாணி, கேழ்வரகு அல்வா, கொள்ளு சூப், கம்பு திணை அல்வா, உப்மா, பாயாசம் கேசரி, தோசை, பொங்கல், உள்ளிட்ட பலவிதமான சிறுதானிய உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
சிறுதானிய உணவை எடுத்துக் கொண்டால் உடல்நலத்திற்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என இதனை தயார் செய்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பாக உணவு தயாரித்த மாணவ மாணவிகளுக்கு உணவுத் துறையின் சார்பில் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கண்காட்சிக்கு முன்னதாக சிறுதானிய உணவுகளின் பயன்பாட்டை விளக்கும் வகையில் யோகா வகுப்புகளும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.