சென்னையில் இருந்து 65 பயணிகள் உட்பட 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீர் இயந்திர கோளாறு காரணமாக விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், இன்று காலை 10.10 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 65 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 70 பேர் இருந்தனர்.

இந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, நடைமேடை 51 இல் இருந்து, ஓடுபாதைக்கு கொண்டுவரப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்தால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து, உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு, விமான கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து இழுவை வண்டி மூலம், அந்த விமானம் மீண்டும் அது புறப்பட்ட இடமான, விமானம் நிற்கும் நடைமேடை 51 க்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதை அடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்கு உள்ளேயே அமர வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விமானம் பழுதுபார்க்கப்பட்டு, தாமதமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, விமானம் வானில் பறக்க தொடங்குவதற்கு முன்னதாகவே, எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் விபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் இருந்த 65 பயணிகள் உட்பட 70 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.