• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எமிரேட்ஸ் விமானம் மோதி ஃபிளமிங்கோ பறவைகள் பலி

Byவிஷா

May 21, 2024

மும்பை விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கப் போகும் நேரத்தில் ஃபிளமிங்கோ பறவைக்கூட்டத்தின் மோதியதில், 40க்கும் மேற்பட்ட பறவைகள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சமீபகாலமாக விமானங்கள் தரையிறங்கும் போது பறவைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எமிரேட்ஸ் விமானம் நுமு 508 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு பிரதான ஓடுபாதையில் தரையிறங்க முயற்சித்த சமயத்தில் கடைசி நிமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை விமான நிலைய வட்டார அதிகாரிகள் “விமானம் தரையிறங்கிய பின் ஆய்வு செய்யும்போது, விமானத்தின் உடற்பகுதியில் பல பறவை மோதியதாக விமானிகள் தெரிவித்தனர். தரையிறங்கிய பிறகும் பறவைகள் விமானத்தின் மீது மோதி தாக்கியதாகவும் தெரிவித்தனர்” எனக் கூறியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் பறவையின் சடலங்கள் சிதறியது காண்பவர்களுக்கு கொடூரமாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பெரும்பாலான பறவை சடலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விபத்தில் குறைந்தது 40 பறவைகள் பலியாகியிருக்கலாம். அந்தப் பறவைகள் தானே க்ரீக் ஃபிளமிங்கோ சரணாலயத்திற்கு பறந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பெரும்பாலான சடலங்கள் அகற்றப்பட்டாலும், சில பகுதிகளில் பறவைகளின் சிதைந்த உடல் பாகங்கள் இருப்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். “இதுபோன்ற சம்பவம் மும்பையில் ஒருபோதும் நடக்காததால் பெரும்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அடல் சேது பாலம் போன்ற பெரிய கட்டுமானத் திட்டங்களால் ஃபிளமிங்கோ பறவைகள் தங்கள் பாதைகளை மாற்றியுள்ளன. ஒளி மாசுபாட்டின் காரணமாகவும் பறவைகள் திசைதிருப்பப்படுகின்றன” எனவும் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை இந்த விபத்து குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் தரப்பில் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் கடைசி வாரத்தில், நவி மும்பையில் உள்ள சீவுட்ஸ் அருகே 12 காயமடைந்த ஃபிளமிங்கோ பறவைகள் கண்டறியப்பட்டன. உடனடியாக சிகிச்சை அளித்தும் 5க்கும் மேற்பட்ட பறவைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. அதே போல் பாம் பீச் சாலையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ஃபிளமிங்கோ பறவை மீது மோதியது. பிப்ரவரியில், 3 ஃபிளமிங்கோக்கள் விளம்பர பலகையில் மோதி கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.