மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் சௌபாக்கியா நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மகன் பிரவீன் குமார் சாமுவேல் இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இன்று சாமு வேலுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியையும் அவரது தந்தை கிறிஸ்டோபரையும் வீட்டை விட்டு வெளியே தள்ளி தனது 3வயது குழந்தையுடன் வீட்டுக்குள் இருந்தபடி கதவுகளை அடைத்துக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் மனைவியும் அவரது தந்தையும் கதவை தட்டியும் திறக்காததால் உடனே மனைவி திருநகர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவன் தன்னுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகளுடன் வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டி விட்டார். எனக்கு அச்சமாக உள்ளது என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருநகர் காவல் உதவி ஆய்வாளர் காளீஸ்வரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

அவர்களும் பலமுறை கேட்டும் சாமுவேல் கதவை திறக்காததால் மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ட்ரில்லிங் மிஷின் கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் போலீசாரை பார்த்ததும் சாமுவேல் அங்குமிங்கும் ஓட முயற்சிக்க அவரை மடக்கி பிடித்து அவரிடமிருந்த மூன்று வயது பெண் குழந்தையை மீட்டனர் பின்னர் சாமுவேலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமுவேல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையே தனது மூன்று வயது குழந்தையுடன் வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் கதவை திறக்காததால் தீயணைப்புத்துறையினர் மூலம் கதவை உடைத்து குழந்தையை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.