விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையிலிருந்து வலது கால்வாய் ,இடது கால்வாய் மூலம் விஜயகரிசல்குளம், வல்லம்பட்டி, பனையடிப்பட்டி, கண்டியாபுரம், கோட்டைப்பட்டி, பந்துவார்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி,இறவார்பட்டி,உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

கடந்த மாதம் வரை அணையில் 12 அடி உயரம் நீர்மட்டம் இருந்து வந்தது. அணைக்கு நீர் வரத்து இல்லாதாலும் தொடர்ந்து மழை பெய்யாதாலும், கடும் வெயில் காரணமாகவும் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஒரே மாதத்தில் இரண்டடி உயரம் நீர்மட்டம் குறைந்து தற்போது பத்தடி உயரமாக நீர்மட்டம் இருந்து வருகிறது.

பருவ மழை பெய்யும் என எதிர்பார்த்து இரண்டு முறை நிலத்தில் உழவு போட்டும் சிறிதுகூட மழை பெய்யததால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்த நிலையில் அணையில் தொடர்ந்து நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் போய்விடுமோ என கவலை அடைந்துள்ளனர்