நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் என்னெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஊராட்சிகளில் உள்ள 95% விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணிக்காக நிலம் கொடுத்த விவசாய நில உரிமையாளர்கள் சாகுபடி தாரர்கள் விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான இழப்பீட்டுத் தொகையை எவ்வித காலகெடுவும் இன்றி உடனே வழங்கிட கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நியாய நில இழப்பீட்டு இயக்கம் தமிழ்நாடு விவசாய நில சங்கங்களின் போராட்ட குழு விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் நில உரிமையாளர்கள்” விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பில் சி பி சி எல் நிறுவனம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சிபிசிஎல் நிறுவன வாயிற் கதவில் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த முற்றுகை போராட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டனர்.