கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியினை விட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி.., செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. இன்றைக்கு காலை அந்த செய்தி கிடைத்திருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இதில் சரியாக ஒரு முடிவாக நல்ல முடிவாக கொடுத்துள்ளது. நிச்சயமாக மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக. இதை ஒரு வெற்றி மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம். அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும் முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண்மை இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியின் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.கீதாலட்சுமி செய்திருந்தார்.