விருதுநகர் மாவட்டம் செங்கமல நாச்சியார்புரம், கிச்ச நாயக்கன்பட்டி, காக்கிவாடான்பட்டி, துரைச்சாமிபுரம், விளாம்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் எள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 60 நாள் பயிரான எள் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நன்கு மழை பெய்ததால் எள் விளைச்சல் அமோகமாக இருந்தது.


விலையும் குவிண்டாலுக்கு ரூபாய் இருபது ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டதால் ஏராளமான விவசாயிகள் லாபம் அடைந்தனர். அது போன்று இந்தாண்டும் எள் விலை இருபது ஆயிரம் அல்லது அதற்கு மேலாக கூடவும் வாய்ப்புள்ளதாக எண்ணி பயிரிட்டனர் ஆனால் தொடர்ந்து மழை பெய்யததால் விளைச்சல் குறைந்தது. விலையும் குறைந்தது இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விளாம்பட்டி விவசாயி நாராயணசாமி கூறியது,
எண்ணெய் வித்துக்கள் தயாரிக்க எள் பயன்படுவதால் சந்தையில் எப்போதும் எள் தேவை இருக்கிறது. அதனால் இப்பகுதியில் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறோம். இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யததால் சென்ற ஆண்டை காட்டிலும் எள் விளைச்சல் மிகவும் குறைந்தது. அறுவடை செய்யப்பட்ட பின்பு எள்ளின் விலை ரூபாய் பதினைந்து ஆயிரம் ஆக குறைந்து விட்டதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




