• Fri. Jan 24th, 2025

விவசாய நிலத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் தவிக்கும் விவசாயி

ByJeisriRam

Apr 23, 2024

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி கழிவு நீர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் விவசாய நிலத்தில் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிங்கராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கால்வாயில் ஊராட்சி கழிவுகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை கொட்டுவதால் தண்ணீரில் குப்பைகளை அடித்துச் சென்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் சென்றடைகிறது. இது சம்பந்தமாக நிலத்தின் உரிமையாளர் கோபி என்பவர் பலமுறை சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விவசாயி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விவசாய நிலத்தில் மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், ஊராட்சி குப்பைகள் போன்றவை அதிக அளவில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
சிங்கராஜபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் அருகே உள்ள விவசாய நிலத்தில் அதிக அளவு குப்பைகள் தேங்கி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி தவிப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.