• Mon. Jun 5th, 2023

ஃபர்ஹானா – சினிமா விமர்சனம்

Byதன பாலன்

May 16, 2023

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணி புரிந்துள்ளார். தேசிய விருது பெற்றசாபு ஜோசப் படத் தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார். பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதைக் களங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு செல்லும் ஒரு இஸ்லாமிய பெண், தன்னை பிளாக்மெயில் செய்யும் ஒரு ஆணின் வக்கிரத்தை எதிர்நோக்கி சந்திக்கும் கதைதான் இந்த ஃபர்ஹானா திரைப்படம்.

ஃபர்ஹானா என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் ஒரு மத்திய தரத்திற்கும் கீழானது. 2 குழந்தைகள் இருக்க.. ஐஸ்வர்யாவின் அப்பாவான கிட்டி பல்லாண்டுகளாக நடத்தி வரும் ஒரு சின்ன செருப்புக் கடையை கவனித்துக் கொள்கிறார் ஐஸ்வர்யாவின் கணவன். அதில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைத்தால்கூட பெரியது.

இதில் பக்கத்திலேயே உறவுகளும், சுற்றமும் இருப்பதால் சற்றே சுமை குறைந்திருக்கிறது. இருந்தாலும் பொருளாதாரத் தேவைகளுக்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் பர்ஹானாவுக்கு ஏற்படுகிறது. கிரெடிட் கார்டு சேவைப் பிரிவில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் சம்பளம் குறைவாக இருக்கிறது.

அதே அலுவலத்தின் மற்றொரு பிரிவில் 3 மடங்கு சம்பளம் கிடைப்பதால் ஆசைப்பட்டு அந்தப் பிரிவுக்குச் செல்கிறாள் பர்ஹானா. அது பிரெண்ட்ஷிப்பாக பேசும் ஆன்லைன் போர்ட்டல். அங்கே வேலை பார்ப்பவர்கள் வாடிக்கையாளர்களிடத்தில் செக்ஸியாகவும் பேச வேண்டிய கட்டாயம் உண்டு.

பழமையான இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்த ஃபர்ஹானாவுக்கு அது செட்டாகவில்லை. பழையபடி கிரெடிட் கார்டு செக்சனுக்கே சென்றுவிடலாம் என்று நினைக்கும்போது தயாளன் என்பவர் ஐஸ்வர்யாவிடம் போனில் பேசுகிறார்.

மற்றவர்களைப் போல அநாகரிகமாகவும், செக்ஸியாகவும் அல்லாமல் நாகரிகமாக, சகஜமாக.. மனதைத் தொடும்வகையில் நட்புணர்வோடு பேசும் தயாளனின் பேச்சு ஃபர்ஹானாவுக்குப் பிடித்துப் போகிறது. அவருடனான பேச்சு அவளுக்குள் ஒரு மாற்றத்தை உண்டு செய்ய.. பணி மாற்றல் கேட்காமல் அந்தப் பணியிலேயே இருந்துவிடுகிறாள் ஃபர்ஹானா. தயாளனின் உதவியாலேயே அவளுடைய பேசும் நேரம் அதிகமாகி, சம்பளமும் கூடிக் கொண்டேயிருக்கிறது.

இந்த நேரத்தில் தயாளன் ஃபர்ஹானாவை நேரில் சந்திக்க விரும்ப ஃபர்ஹானாவும் அதை விரும்புகிறாள். ஆனால், கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட பதட்டத்தில் வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள்.

காத்திருந்து ஏமாற்றமான தயாளன், இதன் பிறகு ஃபர்ஹானாவை மிரட்டத் தொடங்குகிறான். ஃபர்ஹானாவின் உண்மையான பெயர், முகவரி, குடும்பத்தினர் என்று அனைத்தையும், அனைவரையும் தெரிந்து கொண்டு தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி மிரட்டுகிறான். பரிதவித்துப் போகிறாள் ஃபர்ஹானா.

இன்னொரு பக்கம் ஃபர்ஹானாவுடன் பணியாற்றிய சோபியா, மகாபலிபுரம் ரிசார்ட் ஒன்றில் கொலையாக சோபியாவின் கைப்பையில் இருந்த ஆதார் அட்டையின் மூலமாக போலீஸ் ஃபர்ஹானாவைத் தேடி வருகிறது.

ஃபர்ஹானா வேலைக்குப் போவதையே எதிர்த்து வந்த அவளது தந்தை, இதனால் மிகவும் கோபப்படுகிறார். உறவுகள் வருத்தப்படுகிறார்கள். கணவருக்கும் விஷயம் தெரிந்து மனைவி எதையோ மறைக்கிறாள் என்று சந்தேகப்படுகிறார்.

இந்தப் பிரச்சினையை ஃபர்ஹானா எப்படி சமாளித்தாள்..? கடைசியில் தயாளன் என்னவானார்..? என்பதுதான் இந்தக் கதையின் மீதி திரைக்கதை.

படத்துக்குப் படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் கதையின் நாயகியாக, ஃபர்ஹானாவாக படத்தையே தாங்கிப் பிடித்திருக்கிறார்.

ஒரு இஸ்லாமிய பெண்ணாக.. இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளை நழுவாமல் தவறாமல் பின்பற்றும் ஒரு பெண்ணாக.. அன்பான மனைவியாக.. பாசமிக்க தாயாக.. அப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசாத மகளாக என்று பல்வேறு குணாதிசயங்களையும் ஒருங்கே காண்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

அதிக சப்தம் இல்லாமல் பேசும்விதம், கணவருடன்கூட அடக்கமாக பேசுவது.. அலுவலகத்தில் அமைதியானவளாக இருப்பது.. அங்கேயேகூட தொழுகையை நடத்துவது என்று தீவிரமான இஸ்லாமிய பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஐஸ்.

வேலைக்குப் போகத் துவங்கியதும் வெளியுலகத்தின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அத்தருணத்தை உணர்வது.. ஆண்களிடம் பேசத் தயங்குவது.. பெயர் சொல்லிக் கூப்பிட மறுப்பது.. வாடிக்கையாளரிடம் பேசுவதில்கூட தயங்கித் தயங்கி துவக்குவது என்று தனது நடிப்பை உடல் மொழி, குரல், முக பாவனைகள் என்று அனைத்திலும் ஒரு சேர காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

தயாளன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதையறிந்து பதட்டமாகி மெட்ரோ ரயிலிலேயே அழுவதும், அருகில் இருக்கும் ஒரு பெண்மணியின் மடியில் படுத்து கதறுவதுமாய் ஃபர்ஹானாவின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவும், தோள் கொடுக்கவும், ஆறுதல் சொல்லவும்கூட ஒருவரும் இல்லை என்பதாக இயக்குநர் காட்டியிருப்பது செம டச்சிங்கான காட்சி. ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு கேரியரில் இந்த ஃபர்ஹானா, மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவரது கணவராக நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷூக்கும் இது முக்கியமான படம்தான். இதுவரையிலும் அவர் நடித்த படங்களிலேயே குரலை உயர்த்தாமல் நடித்திருப்பது இந்தப் படத்தில்தான் இருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேசைகாட்டிலும் தயங்கித் தயங்கி அவர் பேசும் பேச்சும், மனைவி மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும், மனைவியை பாலோ செய்து மாட்டிய பின்பும் அதற்காக மன்னிப்பு கேட்டு அவளை வேலைக்குப் போகச் சொல்லும்போதும் நமக்குப்
பிடித்த மாப்பிள்ளையாகிறார் ஜித்தன் ரமேஷ்.

நட்பு அழைப்பில் வலிய வந்து பேசும் தயாளன் என்ற செல்வராகவன் முகம் காட்டாமல், குரல் வளத்தாலேயே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாலும் போகப் போக வில்லனாக மாறிவிட.. அந்த சைக்கோ நடிப்பை கிளைமாக்ஸில் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

பழமைவாதத்தில் ஊறிப் போன இஸ்லாமிய குடும்பத் தலைவரான கிட்டி தனது சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். போலீஸ் வந்து விசாரித்துவிட்டுப் போனவுடன் செருப்பை எடுத்துத் தன் தலையில் அடித்துக் கொள்ளும் காட்சியில் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துகிறார்.
ஐஸ்வர்யா ராஜேசின்அலுவலக தோழிகளில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா தன்னை எதற்காக இந்த வேடத்துக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பதை உணர்ந்து நடித்து படத்தின் துவக்கத்திலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். காருக்குள்ளும், ஹோட்டல் அறையிலும் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சி படத்துக்கு சம்பந்தமே இல்லாதது என்றாலும் இப்படியும் சிலர் இருக்கும் காலக்கட்டத்தில்தான் இந்த ஃபர்ஹானாவும் வாழ்கிறாள் என்பதை இயக்குநர் மறைமுகமாக நமக்குச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு தோழியாக நடித்திருக்கும் மலையாள நங்கை அனுமோளின் கவர்ச்சிகரமான முகமே நம்மைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நம் கவனம் முழுவதும் அவரது முகத்தையும், முக பாவனையையும், நடிப்பையும், சிரிப்பையுமே கவனிக்க வைத்திருக்கிறது என்பது உண்மைதான். சிறந்த தோற்றத்தில் சிறந்த நடிப்பையும் கொடுத்திருக்கிறார் அனுமோள்.
காய்கறிகள் விற்கும் பக்கத்து கடை இந்து அம்மணி, பொம்பளைங்க வேலைக்குப் போவது பற்றியும், கடன் வாங்குவது பற்றியும் சொல்லும்போதும் நம் கண்களுக்குத் தனித்துத் தெரிகிறார்.

இரவும், பகலுமாய் மாறி, மாறி வரும் கதையில் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கண்ணைச் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. முதல் பாடல் காட்சியில் ஜொலிக்கும் ஒளிப்பதிவில் ஒலிக்கும் பாடலும், நடனமும் சூப்பர்ப்..!

சிவசங்கரின் கலை இயக்கத்தில் அலுவலகமும், ஐஸ்வர்யாவின் வீடும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு வீட்டில் என்னென்ன இருக்குமோ அவைகளே இதில் இடம் பிடித்துள்ளன. அதேபோல் செல்வராகவனின் வீட்டில் இருக்கும் கலைப் பொருட்களை வைத்து ஒரு ஷோவே நடத்தலாம்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சோகத்தையும், வேகத்தையும் சம அளவில் கொடுத்திருக்கிறார். வீடு என்றால் சோகம்.. அலுவலகம் என்றால் ரிதம் என்று சொல்லும் அளவுக்கு கடைசிவரையிலும் இதை மெயின்டெயின் செய்திருக்கிறார் ஜஸ்டின். அதே நேரம் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் நடக்கும் களேபரத்தில் ஒலிக்கும் பின்னணி இசை, நம்மைத் தூக்கிவாரிப் போடுவதும் உண்மை.

படத்தில் நமக்கிருக்கும் ஒரேயொரு பிரச்சினையே வசனங்கள்தான். அதிலும் செல்வராகவன் கேரக்டர் வரும்வரையிலும் வசனங்கள் மிக இயல்பாக, எளிமையாக நமக்குக் கேட்பதுபோல இருந்தது. ஆனால், செல்வராகவன் பேசும் வசனங்கள் இலக்கியத்தனமாகவும், எளிதில் புரியாத விவாதப் பேச்சாகவும், கவிதை வடிவிலும், ஆழ் மனசைக் கிளப்பிவிடும் தத்துவ விசாரங்களாகவும் அமைந்துவிட்டது படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பேக் டிராப் என்றே சொல்லலாம். இதை கண்டிப்பாக பி அண்ட் சி தியேட்டர்களில் யாரும் ரசிக்கவே முடியாது. புரிந்தால்தானே ரசிப்பார்கள்..! வசனகர்த்தா உயிர்மையில் எழுதுவதாக நினைத்து எழுதிவிட்டார் போலும்..!

படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பின்புலத்தைப் பற்றிப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதுதான் உண்மை.

சினிமாவைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்குமான குணநலன்கள் மிகவும் முக்கியம். அவரவர் குண நலன்களுக்கெதிரான விஷயத்தை காட்ட வேண்டுமென்றால், அதற்கு நேரெதிரான குணத்தைக் கொண்டவர்களை வைத்துதான் செய்ய வேண்டும். அப்போதுதான் அதில் நடிப்பும், உண்மையும் வெளிப்படும்.

தினமும் 5 வேளையும் நமாஸ் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியில் வராமல், வீடு, கணவர், குழந்தைகள், வீட்டு வேலைகள் என்று வீட்டுக்குள்ளேயே சிறை போன்று வாழ்ந்த வந்த ஒரு பெண் தான் வேலைக்கு சென்றால்தான் தன் பிள்ளைக்கான ஸ்கூல் பீஸையே கட்ட முடியும் என்னும் நிலைமை வரும்போதுதான் வீட்டிலிருந்து வெளியில் செல்கிறாள்.

வீட்டுக்குள்ளேயே மெதுவாகப் பேசி பழக்கப்பட்டவள், அதிகாரத் தோரணையில் 8 மணி நேரமும் முன் பின் தெரியாதவரிடம் பேசியே ஆக வேண்டும் என்ற சூழல் வரும்போது அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைத்தான் நாயகி இங்கே நடிப்பாக காட்ட வேண்டியுள்ளது. இதற்காகத்தான் இஸ்லாமிய பின்னணியில் இயக்குநர் கதையை அமைத்துள்ளார்.

“ஒரு ஃபர்ஹானா செய்யும் தவறை அனைத்து ஃபர்ஹானாக்களும் செய்வார்கள்” என்று சொன்னால் அது முட்டாள்தனம். ஆனால், ஒரு ஃபர்ஹானா சந்திக்கும் பிரச்சினைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் மற்றைய ஃபர்ஹானாக்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படம் இஸ்லாமிய மக்களுக்கு நல்லதொரு விஷயத்தையும், ஒரு வழிகாட்டுதலையும்தான் சொல்லியிருக்கிறது என்பதுதான் உண்மை.

இஸ்லாம், இந்து, கிறித்துவம் என்றில்லாமல் ஒரு பெண், ஒரு மனைவி, ஒரு தாய்.. அவள் சந்திக்கும், எதிர்கொண்ட பிரச்சினைகளின் தொகுப்பாக இந்தப் படத்தை நாம் அணுகுவதுதான் மிக சரியான பார்வையாக இருக்கும்.

இந்த ‘பர்ஹானா’வின் வாழ்க்கையை அவசியம் பார்த்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *