மதுரை மாவட்டம், மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொழில் நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் சர்வேயர்காலனி அருகே உள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் (41). கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர். இவரது மனைவி பெயர் விசாலினி (36). இத்தம்பதிக்கு 12 வயதில் ரமிஷா ஜாஸ்பல் என்ற மகள் உள்ளார். ரமேஷ் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வீடு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து திருப்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு சடலமாக கிடந்தனர். சடலங்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ், அவரது தோழி ஒருவருடன் இணைந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. தொழிலில் நஷ்டம் அடைந்ததோடு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு வகையில் டார்ச்சர் அனுபவிப்பதாக தங்கள் கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாகவும் தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் அவர் தன் குடும்பத்தோடு இணைந்து இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தொழில் நஷ்டத்தால் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் தற்கொலை..!
