ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர் திடீரென அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பிப்ரவரி 8-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் செந்தில்முருகன் என்பவர் இடைத்தேர்தலில சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். செந்தில் முருகன் கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்,
ஆனால், சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட செந்தில் முருகன் மனு தாக்கல் செய்ததால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் ஈரோடு திமுக மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலையில் செந்தில்முருகன் திமுகவில் இன்று திடீரென இணைந்தார். இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்,