• Fri. May 3rd, 2024

செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்.

Byவிஷா

Jul 15, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்படியான நிலையில் திடீரென செந்தில் பாலாஜிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி அவரது மனைவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு எதிராகவும் அமலாக்கத்துறை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி முன்பு விரைவில் பட்டியலிடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்திருந்தது.
இதன் அடிப்படையில் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவர் முன் கடந்த ஏழாம் தேதி வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. அப்போது அவர் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்பேரில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையும் நடைபெற்றது.
இந்த சூழலில் ‘மூன்றாவது நீதிபதி அமைக்கப்பட்டதற்கு எதிராகவோ, ஏழாம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஏதேனும் மாற்றங்களை கூறியோ அல்லது அதற்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களைக் காட்டியோ ‘வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்று செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடலாம். அவ்வாறு நாடினால் , நீதிமன்றமும் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அதை பரிசீலிப்பதற்கான வாய்ப்பு உண்டு’ என சொல்லப்பட்டு வந்தது.
இவற்றை கருத்தில்கொண்டு, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் அப்படி பரிசீலனை வந்தாலும் தங்கள் தரப்பு கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அம்மனுவில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *