• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கோவாவில் நாளை தேர்தல்… கணவன்-மனைவி ஜோடி ஜோடியா போட்டி!

கோவா சட்டசபையில் உள்ள 40 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 தம்பதிகள் தனித்தனி தொகுதிகளில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாளை (பிப்.,14) தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்கிறது. மாநிலத்தை ஆளும் பாஜக, எதிர்கட்சியான காங்கிரஸ், புதிதாக கால்பதித்துள்ள ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், புதிதாக ஆட்சி கட்டிலில் அமர ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவா அரசியல் களத்தில் 5 தம்பதிகள் தனித்தனி தொகுதிகளில் களம் இறங்கி உள்ளனர். இந்த தம்பதிகள் யார், இவர்கள் போட்டியிடும் தொகுதி, கட்சிகள் குறித்த விபரங்கள் முழுவிபரம் வருமாறு:

கோவாவை ஆளும் பாஜக சார்பில் 2 தம்பதிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஸ்வாஜித் ரானே, வால்போய் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரது மனைவி தேவியா போரியம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். போரியம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேவியாவின் மாமனாரும், ஆறு முறை கோவா முதல்-அமைச்சராக இருந்த பிரசாத்சிங் ரானே காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக இதுவரை வென்றது இல்லை. ஒருவேளை இந்த முறை தேவியா வென்றால் அது வரலாற்றை மாற்றி எழுதும்.

இதேபோல் பனாஜி தொகுதியில் பாஜக சார்பில் அதனாசியோ மான்சிரேட்டி போட்டியிடுகிறார். இவரது மனைவி ஜெனிபருக்கு தாலிகா தொகுதியில் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2017 தேர்தலில் ஜெனிபர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேநேரத்தில் பனாஜி தொகுதியில் வென்று முதல்அமைச்சராக இருந்த பாஜகவின் மனோகர் பாரிக்கர் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் அதனாசியோ மான்சிரேட்டி களம் இறங்கி வாகை சூடினார்.

எம்எல்ஏக்களாக உள்ள இந்த தம்பதி காங்கிரஸ் கட்சியில் இருந்து 2019ல் விலகி 8 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தனர். தற்போதும் அதனாசியோ மான்சிரேட்டி-ஜெனிபர் தம்பதிக்கு முறையே பனாஜி, தாலிகா தொகுதிகளில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் பனாஜியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் அதிருப்தி அடைந்துள்ளார். இவர் பாஜக வேட்பாளர் அதனாசியோ மான்சிரேட்டியை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.

மேலும் துணை முதல் மந்திரி சந்திரகாந்த் கவேல்கர், குயிபம் தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரது மனைவி சாவித்ரிக்கும் சங்கம் தொகுதியில் வாய்ப்பு கோரினார். ஆனால் சாவித்ரிக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால் சாவித்ரி சங்கம் தொகுதியில் சுயேச்சையாக களத்தில் குதித்துள்ளார். இத்தம்பதி கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இதில் சங்கம் தொகுதியில் சாவித்ரி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் குயிபத்தில் சந்திரகாந்த் கவேல்கர் வெற்றி பெற்று பாஜகவில் இணைந்தார். அதன்பின் துணை முதல் மந்திரியானார்.

காலன்குட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மைக்கேல் லோபா, முதல் மந்திரி பிரமோத் சாவந்த் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தார். கோவாவில் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் 2021 டிசம்பர் மாதமே தனது மனைவியும், மாநில மகளிர் அணி துணை தலைவருமான டிலிலா, சியோலிம் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவித்து தேர்தல் பணியில் ஈடுபட்டார். தேர்தல் நெருங்கவே வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. அப்போது சியோலிம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தயானந்த் மன்ட்ரேகரை நிறுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், மைக்கேல் லோபா-டிலிலா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே சட்டசபை தேர்தலில் சீட் வழங்கப்படும் என கட்சி கூறியது.

இதனால் கோபமடைந்த மைக்கேல் லோபோ அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மனைவி டிலிலாவுடன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது கால காலன்குட் தொகுதியில் மைக்கேல் லோபாவும், சியோலிம் தொகுதியில் டிலிலாவும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். மேலும் கோவா அரசியலில் புதிதாக கால்பதித்து இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒரு தம்பதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

கோவா பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய கிரண் கன்டோல்கருக்கு அல்டோனா தொகுதியிலும் அவரது மனைவி கவிதா, திவியம் தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறாக 5 தம்பதிகள் கோவா அரசியலில் போட்டியிடுவது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. இவர்கள் அனைவரும் வெற்றி பெறும் பட்சத்தில் மொத்தமுள்ள 40 எம்எல்ஏக்களில் ஒரு பங்கு 10 பேர் தம்பதியாக கோவா சட்டசபைக்கு செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.