நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது.
அதிமுக-வுக்கு சுமார் 25 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், மாநகராட்சிகளில் 7 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சிகளில் 43.59 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது. நகராட்சிகளில் 43.49 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 41.91 சதவீத வாக்குகளையும் திமுக பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சிகளில் அதிமுக 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நகராட்சிகளில் 26.86 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 25.56 சதவீத வாக்குகளையும் அதிமுக பெற்றுள்ளது.
மாநகராட்சிகளில் 7.17 சதவீத வாக்குகளைப் பெற்று, மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது. நகராட்சிகளில் 3.31 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 4.30 வாக்குகளும் பாஜக-வுக்கு கிடைத்துள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மாநகராட்சிகளில் 3.16 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. நகராட்சிகளில் 3.04 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 3.85 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
பாமக-வுக்கு சராசரியாக ஒன்றரை சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மாநகராட்சிப் பகுதியில் இரண்டரை சதவீத வாக்குகளும், மற்ற பகுதிகளில் சுமார் 0. 8 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.