

தமிழக மக்கள் நலனை முன்வைத்து, ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என ,செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு பேசுகையில்,
“மாநகராட்சி நிர்வாகம் மிக மிக மெத்தனமாக நடைபெறுகிறது. மாநகராட்சியை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநகராட்சியை குற்றம் சாட்டி எம்.எல்.ஏ, துணை மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததில் இருந்தே மாநகராட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி புதிய வாகனம் வாங்கி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வல்லவனுக்கு வல்லவன். அதிமுக வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை என்றாலும் கூட கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யும்போது தான் கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்குமா என தெரிய வரும். தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் கருதி ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார்” என கூறினார்.