மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ஜி கே மூப்பனார் அவர்களுடைய 24 ஆவது நினைவு தினம் இன்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ஏற்பாடு செய்திருந்த நினைவு தின நிகழ்ச்சியில்… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் முக்கியமான அம்சம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் அருகருகே அமர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுதான்.
ஏனென்றால் அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கனவே அமைந்திருந்த நிலையில், அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அதிமுகவினரை பற்றியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் மிகக் கடுமையாக, தரக்குறைவாக பேசினார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது.
மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த 2025 ஏப்ரல் மாதம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பேசினார் அமித்ஷா.
அப்போது அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவோடு கூட்டணி என அதிமுக வற்புறுத்தியதாகவும் அதற்கு இணங்கியே அமித்ஷா மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினார் என்றும் இரு தரப்பிலுமே உறுதியான பேச்சுகள் இருந்தன.
இதன் பிறகு அமித்ஷா மீண்டும் சென்னைக்கு வந்து பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது.
அதற்கேற்றார் போல் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்த பிறகும் அண்ணாமலை பட்டும் படாமல் தான் பேசி வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, நெல்லையில் பாஜக பாக முகவர்கள் கூட்டத்துக்கு அமித்ஷா வந்திருந்தார். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனில் கடமை” என்று அதிரடியாக பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இந்த பின்னணியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் முன்னெடுப்பில் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இது அமைந்தது. இக்கூட்டத்தில் பேசும்போது அனைவரையும் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, “ சகோதரர் அண்ணாமலை அவர்களே…’ என்று பேசினார்.
அதன் பின் மேடையில் அண்ணாமலை பேசும்போது எல்லாரும் இங்கே பேசும்போது அண்ணன் எடப்பாடி அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சொன்னார்கள். 2026 இல் அந்த மாற்றம் நடக்கும் என்று பேசினார்.
முன்னதாக எடப்பாடி பேசிவிட்டு விடைபெற்றுச் செல்லும் நிலையில் அண்ணாமலையின் கையைப் பிடித்துச் சொல்லிவிட்டு விடைபெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிகழ்வில் தேமுதிக சார்பில் சுதீஷும் கலந்துகொண்டார்.