சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த ஏர் அரேபியா விமானத்தில், திடீரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 5.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், தாமதமாக காலை 7 மணி, அதன் பின்பு காலை 8.30 மணிக்கு என்று, மாறி மாறி, புறப்படும் நேரம் அறிவித்து விட்டு, பின்பு இன்று விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமானத்தில் பயணிக்க வந்திருந்த 180 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவிப்பு.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இரவு, இல்லையேல் நாளை அதிகாலை விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, பயணிகள் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து, ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 192 பயணிகளுடன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானம் மீண்டும், சென்னையில் இருந்து, அதிகாலை 5.05 மணிக்கு, அபுதாபிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபி சொல்வதற்கு 180 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும், விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்குவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை அறிந்து, விமானம் தாமதமாக காலை 7:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் காலை 7 மணி ஆகியும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படவில்லை. இதை அடுத்து பயணிகள் ஆத்திரம் அடைந்து, விமான அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு, விமானம் காலை 8:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை 9 மணிக்கு மேல் ஆகியும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படவில்லை. இதை அடுத்து பயணிகள் மீண்டும் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அபுதாபி சொல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் 180 பேரும், பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானம் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து அபுதாபி செல்லவிருந்த 180 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் அவதிக்குள்ளானார்கள்.