இளைஞர்களை குறி வைத்து போதைப் பொருள் பரவுகிறது, கோவில்களில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது என பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா குற்றம் சாட்டி வருகிறார்.
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது..,
தமிழகத்தில் உள்ள கல்வி, நிதி மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தலைமை ஆசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ளன. எட்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களில் 75% பேர் இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறைகளில் பெரும் வரி இழப்புகள் ஏற்படுகின்றன. டாஸ்மாக் மூலமாக மட்டும் 27,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க அரசு முன்வந்தால் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கலாம் என்றும் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்கள் 75% அதிகரித்துள்ளன. தேசிய குற்றப்பதிவின் படி, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்த நகரங்களின் பட்டியலில் பின்தங்கியுள்ளதாக சூர்யா குறிப்பிட்டார்.
இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் பரவுகிறது. போலீசுக்கு தகவல் கொடுத்த மாணவர்கள் தாக்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. அரசு இதை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
கோவில்களில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தணிக்கை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த துறை முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவோம் என்று உறுதியளித்தார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த அவரது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், மக்களே முடிவு எடுத்து மாற்றம் கொண்டு வர வேண்டும் என சூர்யா வலியுறுத்தினார்.