• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு விருப்பமில்லை – டாக்டர் ராமதாஸ்

ByP.Kavitha Kumar

Feb 25, 2025

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த திமுக அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணம், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த திமுக அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2003-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முந்தைய ஆட்சியில் தீவிரமடைந்த நிலையில், அது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக 2017 ஆகஸ்ட் 3-ம் தேதி மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் மீண்டும் ஒரு வல்லுநர் குழு இதே காரணத்திற்காக அமைக்கப்பட்டது. அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தது.

ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஸ்ரீதர் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை. அதனால், அந்த அறிக்கையின் விவரங்களைக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பித்திருந்தார். அதற்கு தமிழக அரசின் நிதித்துறை அளித்துள்ள பதிலில், ஸ்ரீதர் குழு அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும், அதனால், அதன் விவரங்களை தர முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. அரசு ஊழியர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை கடந்த 4-ம் தேதி தமிழக அரசு அமைத்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முன் அதுகுறித்து ஆராய கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களின் பரிந்துரைகளையும் அரசு தள்ளுபடி செய்து விட்டதாகவே பொருள்.

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அறிவிப்பு செய்தது பிப்ரவரி 4-ம் நாள். அதனால், அதற்கு முன்பாகவே, ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவின் அறிக்கை நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த குழுவின் அறிக்கை விவரங்களைக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 7. அதற்கு தமிழக அரசின் நிதித்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 17. ஸ்ரீதர் குழுவின் அறிக்கை பிப்ரவரி 17-ம் நாள் வரை அரசின் ஆய்வில் இருந்தால், ககன்தீப் சிங் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது ஏன்?

ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் ஸ்ரீதர் குழுவின் அறிக்கை எவ்வாறு அரசின் ஆய்வில் இருக்க முடியும்? இந்த இரண்டில் ஒன்று தானே சாத்தியமாக முடியும்? தனிப்பட்ட ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அளித்த மனுக்கு, ஸ்ரீதர் குழு அறிக்கை ஆய்வில் இருப்பதாக தெரிவித்த தமிழ்நாடு அரசு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பொதுவாக வெளியிட்ட அறிவிப்பில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினால், அதன் மூலம் யாரை ஏமாற்ற முயல்கிறது?

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும். அதற்காக எந்த ஆய்வும் தேவையில்லை; யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குழு அமைத்து பரிந்துரை பெற்றுத் தான் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், ஸ்ரீதர் குழு அறிக்கை மீது ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து செயல்படுத்தலாம். ஆனால், அந்த எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த ஏமாற்று நாடகம் எடுபடாது.

இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.