• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக

Byவிஷா

Oct 8, 2024

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து திமுக முதல் முதலாக களத்தில் இறங்கியுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தொகுதி வாரியாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல் ஃ நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட திமுகவில் தொகுதி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதி பார்வையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.