• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மகளிருக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தது திமுக ஆட்சி- எம்.பி கனிமொழி

தேனி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் மகளிர் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கம்பம் நடராஜன் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெப்ரின் ஜியோன் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் சாந்தி, சகாயராணி, சுந்தரி, இந்திரா, ரம்யா, ஜெயா, சுப்புலட்சுமி, சுனோதா முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டரணி நாமக்கல் ராணி, தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ, விஜிலா சத்யானந்த் பேசினர்.

கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி சிறப்புரையாற்றினார். கனிமொழி கருணாநிதி எம்பி பேசுகையில்.., பல மாநிலங்களில் ஆண்கள் ஆயிரம் பேர் இருந்தால் பெண்கள் 800 ,900 பேர் என்று ஆண்களை விட குறைவாக உள்ளதை பார்க்கிறோம், ஆனால் தமிழ்நாட்டில் விகிதாச்சாரத்தை எடுத்துக்கொண்டோமேயானால் ஆயிரம் பெண்கள் இருந்தால் தமிழ்நாட்டிலே 994 ஆண்கள் தான் இருக்கிறார்கள் .
ஏனென்றால் மற்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கிறார்கள் தமிழ்நாட்டில் இது பெரியாரின் மண் என்பதால் அதிகமாக பெண்கள் உள்ளனர். இங்கு ஒரு வெற்றி, தோல்வியை நிர்ணிக்க கூடிய இடத்தில் பெண்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் எப்பொழுதும் இருக்கும் விழிப்புடன் இருக்கக்கூடியவர்கள்.
தமிழ்நாட்டுப் பெண்கள் அரசியலை நன்கு அறிந்து புரிந்துள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தால் தங்களது குடும்பத்திற்கு, தங்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதை பெண்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் இருக்கக்கூடிய சகோதரிகளின் நிலை, சிறுபான்மை மக்களின் நிலை நம் அனைவருக்கும் தெரியும். அங்கு இருக்கக்கூடிய ஆட்சியைப் பற்றி விமர்சித்தால் அவர்களது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்படும். பாஜக ஆட்சி புரியக்கூடிய பகுதிகளில் வளர்ச்சி கிடையாது. பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், 10 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் அதிமுக ஆட்சி காலத்தில் இல்லை. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. டெல்லி என்ன சொல்கிறதோ, கோடு கிழிக்கிறதோ அதை மட்டும் தான் செய்கிறார்கள்.
அதிமுக கும்பிடு போட்டு தவழ்ந்து போய் ஆட்சியை பிடித்தவர்கள்.

தென்னிந்திய பகுதியில் உள்ள அத்தனை மக்களின் உரிமைக்காக, அது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரும் சட்டம், மொழி திணிப்பு என்றாலும் அதை எதிர்த்து ஒரு குரல் எழுகிறது என்றால், அந்தக் குரல் தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவரது குரலாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை விட நான் பெரியவன் என்று சொல்லக்கூடிய ஆளுநர், சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்யும், ஆனால் தமிழ்நாட்டில் ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். ஆளுநர் தேசிய கீதத்தைக்கூட அவமதிப்பு செய்கிறார். ஆளுநர் விஷயத்தில் மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் மூலம் சிறப்பான தீர்ப்பை பெற்று பாடம் கற்பித்தவர் தமிழக முதல்வர். நமது உரிமைகளுக்காக குரல் எழுப்பக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி. நீட் தேர்வு முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் வரை தமிழர்களுக்காக போராடக்கூடிய ஆட்சி தமிழக முதல்வருடைய ஆட்சி.

இந்த ஆட்சியில் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு அதிகப்படியான திட்டங்களை தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார். பெண்களுக்கான விடியல் பயணம், ஒரு காலகட்டத்தில் பெண்கள் வெளியே செல்ல வேண்டுமென்றால் வீட்டில் காசு கேட்க வேண்டும், முன்னதாக அனுமதி பெற வேண்டும், ஆனால் தற்போது அதெல்லாம் இல்லை, அனுமதி மட்டும் கேட்டுவிட்டு தாராளமாக செல்லலாம், சிக்கனத்தை கையாளும் பெண்களுக்கு இந்த பேருந்து பயணம் உதவியாக உள்ளது. மாதம் ஆயிரம் ரூபாய் என்பது மகளிர் உதவி தொகை அல்ல, பெண்களுக்கு அவர்களுடைய உரிமையை நிலை நாட்ட கொடுக்கப்படும் உரிமைத் தொகை. ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. பெண்கள் அந்த உரிமை தொகையை தனது பிள்ளைகளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்கலாம், தனது தாய் தந்தையருக்கு உதவி செய்யலாம் என தங்களது விருப்பப்படி அவர்கள் செலவழிக்கும் வண்ணமாக கொடுக்கப்படுகிறது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி முதல் விடுபட்டுள்ள மகளிர்களுக்கும் அது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஒரு பெண் பத்தாவது படித்து விட வேண்டும் என்பதற்காக பத்தாவது படித்தால் திருமண உதவி திட்டம் கலைஞர் கொண்டு வந்தார், சின்ன சின்ன ஊர்களிலும் அரசு கல்லூரிகள் அமைக்கப்பட்டு இன்று கிராமங்களில் உள்ள பிள்ளைகளால் படிக்க முடிகிறது. பெண்கள் படிக்கக்கூடிய வாய்ப்புகள் தமிழ்நாட்டில் தற்போது அதிகமாக உள்ளது. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் படித்து முடித்த பெண் பிள்ளைகளுக்கு கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக புதுமை பெண் திட்டத்தை கொண்டு வந்தார். அதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலை வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்கான திட்டங்கள், வளந்த நாடுகளில் கூட கிடைக்காத அளவுக்கு வீடு தேடி மருத்துவ திட்டம், இதையெல்லாம் வழங்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இதேபோன்று பல்வேறு திட்டங்கள் உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பெண்கள் சுலபமாக ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கூற முடியும். இனிவரும் காலங்களில் பெண்கள் சுயமாக, தைரியமாக சமூகத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்திட யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை அனைவரும் அறிந்து வைத்துள்ளீர்கள். அதனை மற்றவர்களிடமும் கொண்டு போய் சேர்ப்பது பெண்களின் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது. வெளியே செல்லும்போது பெண்கள் கைப்பையை தூக்கிக்கொண்டு செல்வது போன்று திமுக ஆட்சியின் சாதனைகளை மனதில் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும், செல்லும் இடங்களில் எல்லாம் நமது சாதனைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்,
அனைவரது கையிலும் செல்போன் உள்ளது.
கழகத்தின் செய்திகள், ஆட்சியின் சாதனைகள் குறித்து அதில் அனுப்புங்கள். அதேபோன்று வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை எதிர்த்து குரல் கொடுங்கள்.

வேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கக்கூடிய ஆட்சி யாருடைய ஆட்சி உங்களுக்கு பாதுகாப்புகளை உருவாக்கக்கூடிய ஆட்சி யாருடைய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. ஒவ்வொரு இந்துக்களுக்கும் அவரது உரிமைகளுக்கு போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, பல மாநிலங்களில் பாஜக வாக்காளர் பட்டியலில் குழப்பங்கள் செய்துள்ளார்கள் என்று பல்வேறு செய்திகள் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வாக்காளர் பட்டியலில் திடீரென இல்லாதவர்கள் இருப்பதாகவும் இருப்பவர்களை இல்லாதவர்களாகவும் மாற்றி விடுவார்கள்.
எனவே வாக்காளர் பட்டியலை அவ்வப்போது நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களது பகுதிகளில் வாக்குகளின் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த வாக்காளர்களை உடனடியாக மாவட்ட செயலாளர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் அழைத்து வந்து அவர்களுக்கான தீர்வை பெற்றுத்தாருங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மறுபடியும் வந்தால் மட்டுமே தமிழ்நாட்டையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும், அதனை மனதில் வைத்துக் கொண்டு பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற தேர்தலில் உழைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், மாநில தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரா பாண்டியன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், கம்பம் தொகுதி தேர்தல் பார்வையாளர் ஜெயன், கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், நகர செயலாளர்கள் (வ) வீரபாண்டியன், (தெ) பால்பாண்டி ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் குருகுமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சாரதா சென்றாமன் நன்றி கூறினார்.