நடிகர் சத்யராஜ் மகளான திவ்யாசத்யராஜ் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து பாராட்டுகளைப் பெறும் ஒரு நடிகர் தான் சத்யராஜ். இவரது மனைவி பெயர் மகாலட்சுமி. இந்த ஜோடிக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சத்யராஜின் மகன் சிபி சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அவரது மகள் திவ்யா சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், மகிழ்மதி என்கிற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வருகிறார் திவ்யா சத்யராஜ். அவருக்கு தற்போது 31 வயது ஆகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவும் இல்லை.
சினிமா நடிகர்களின் வாரிசு என்றாலே அவர்களுககு படங்களில் நடிக்க வாய்ப்பு வருவது வழக்கம் தான். அந்த வகையில் திவ்யா சத்யராஜுக்கும் சினிமாவில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அதையெல்லாம் அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். அவர் தன்னுடைய கனவை நிறைவேற்ற தான் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்துள்ளார்.
திவ்யா சத்யராஜுக்கு அரசியல்வாதி ஆக வேண்டும் என்பது தான் கனவாக இருந்து வந்துள்ளது. தற்போது அவரின் இந்த நீண்ட நாள் கனவு நனவாக உள்ளது. அவர் அடுத்த வாரம் அரசியலில் இணைய உள்ளாராம். ஆனால் அவர் எந்த கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட உள்ளார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதே திவ்யா சத்யராஜுக்கு பாஜக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்துவிட்டார். இதனால் பாஜகவில் அவர் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள கட்சிகளே அவரின் டார்கெட் ஆக இருக்கும்
திவ்யா சத்யராஜின் தாய் மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் தகவல் அண்மையில் தெரியவந்தது. இதை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், அவர் தாய் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். தன் தாய் கோமாவில் இருந்தாலும் அவர் மீண்டு வருவார் என்கிற நம்பிக்கையோடு சிகிச்சை அளித்து வருவதாக திவ்யா சத்யராஜ் கூறி இருந்தார்.
அரசியல் என்ட்ரி கொடுக்கும் திவ்யா சத்யராஜ்
