• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ByT.Vasanthkumar

Jan 22, 2025

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்கலூர் மற்றும் பெண்ணக்கோணம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் 21.01.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்கலூர் ஊராட்சியில் காந்தி நகர் இருளர் குடியிருப்பு பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடும் வகையில் 4 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி பழங்குடியினர் குடியிருப்புத் திட்டத்தின் (PM Janman) கீழ் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு வீடுகள் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அளவீட்டுப் பார்த்து ஆய்வு செய்து குடியிருப்பில் கழிவறை வசதிகள் கண்டிப்பாக ஏற்படுத்திடவும் அதனை பயன்படுத்திடும் வகையில் கட்டமைக்கவும் பணிகளை விரைந்து முடிக்கவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காகவும், வீடு கட்ட இயலாத ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித் தருவதற்காகவும், குடிசை இல்லா தமிழகம் உருவாக்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கலைஞரின் கனவு இல்லம் என்ற வீடு கட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 337 வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளில் முன்னேற்ற நிலை மற்றும் பயனாளிகளின் பயன்கள் குறித்து இன்று வடக்கலூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனடிப்படையில், வடக்கலூரில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயனாளியான ராஜமூர்த்தி வீட்டின் பணி முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீட்டின் பணிகளை விரைந்து முடித்திடவும், வீட்டிற்கான தவணை தொகைகளை பயனாளிகளுக்கு பணி நடைபெறுவதற்கு ஏற்ப அவ்வபோது உடனுக்குடன் வழங்கிட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வீடு இல்லாத ஏழைகளுக்கும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கும் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடு மிகப்பயனுள்ளதாகவும் வீடு கட்டும் கனவு நிறைவேறியுள்ளதாகவும் பயனாளி ராஜமூர்த்தி தெரிவித்தார்.
தொடர்ந்து, பென்னகோணம் ஊராட்சியில் உள்ள லெப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.50 லட்சம் மானியத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார மருத்துவ பொது சுகாதார கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஜெயபால், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.