புறப்படத் தயாராகும் கலெக்டர்…
புதுக்கோட்டை புகைச்சல்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடியைக் கொடுப்பது யார்?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா போடும் உத்தரவுகளை அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் நடைமுறைப் படுத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வியை தினந்தோறும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்பவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் மனுக்கள் பதினைந்து நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான பிரச்சினைகள் கிடப்பிலேயே போடப் படுகின்றன.
தொடர்ந்து மனுக்களும் புகார்களும் கொடுத்துப் பார்த்து வெறுத்துப் போன பொது மக்களில் ஒருசிலர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறத்திலேயே தீக்குளிக்கவும் முயற்சி செய்கிறார்கள்.
6.10.2025 அன்று திங்கள் கிழமை வழக்கப்படி மனு நீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வாங்கிக் கொண்டிருந்தபோது அவர் கண் முன்னாலேயே ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார். உடனே ஊழியர்கள் அதைத் தடுத்து விட்டார்கள் என்ற போதிலும் அந்தத் தகவல் எந்த மீடியாவின் கண்களுக்கும் காதுகளுக்கும் போகாமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள்.
அதற்குக் காரணம் இல்லாமலில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நான்கு புறமும் எல்லைக் காவல் நிறைந்த பகுதியாகும். தெற்குப் புறத்தில் இருந்து மட்டும்தான் வர முடியும். அங்கும் கடும் காவல்துறையின் சோதனைகள், கர்ச்சிப்பைக் கூட முகர்ந்து பார்த்துத்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஆயுதப்படைப் போலீசார், ஊர்க்காவல் படையினர், அதையும் தாண்டி மெட்டல் டிடெக்டர் சோதனைகளத் தாண்டி உள்ளே சென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிற்படியில் இரண்டு விதமான சோதனைகள். அதையும் தாண்டி உள்ளே சென்றால்தான் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க முடியும்.
மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில் மாவட்ட வருவாய் அலுவரோ துணை ஆட்சியரோ இருந்து மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
அந்த இடம்வரை மாவட்ட ஆட்சியர் அருணாவின் கண்முன்னே மண்ணெண்ணைப் பாட்டில் சென்றிருக்கிறது என்றால் தீக்குளிக்க முயன்றவர் இதற்கு முன்பு அரசுத் துறை அதிகாரிகளால் எந்தளவுக்கு அலைக்கழிக்கப்பட்டிருப்பார் என்பதையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏன் தற்கொலை அளவுக்குச் செல்கிறார்கள்? ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் ஏற்கனவே தீக்குளிக்க முயன்ற இளைஞரான செரியலூர் அன்புச்செல்வனிடம் இதுகுறித்து பேசியபோது,
“எங்களது ஊரில் வேலிக்கணக்கான சொத்துகளை ஒருவர் அபகரித்து தென்னந்தோப்பு போட்டு வைத்திருக்கிறார். அதை மீட்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் வரை சென்று ஆணையையும் பெற்று வந்தேன். அதன் விளைவாக என்னை வீட்டுக்குள் வைத்து வீட்டைவிட்டு வெளியில் வராத அளவுக்கு வேலிபோட்டு அடைத்து விட்டார்கள். காவல்துறை வந்து மீட்டது. ஆனால் அப்போது போட்ட வேலியை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் வரை உத்தரவு போட்டும் இங்குள்ள அதிகாரிகள் பணக்காரர்களுக்குப் பயந்து கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக நான் ஊருக்குள் போக முடியவில்லை.
அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துக் கொடுத்து அலைந்து பார்த்து விட்டு ஆட்சியர் அலுவலக வாசலில் வைத்து உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டேன். தீ வைத்துக் கொள்வதற்குள் வந்த காவல்துறை வந்து தண்ணீரை ஊற்றி வேகத்தைக் குறைத்ததோடு சரி. அடுத்த திங்கள்கிழமை முதல் இந்த வாரம்வரை அந்த இடத்தில் தீயணைப்பு வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டுத்தான் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைகள் நிறைந்த மனுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இத்தனைக்கும் எனது பிரச்சினை மட்டுமல்ல 95சதவீதப் பிரச்சினைகள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களே தீர்த்து விடக்கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் அலுவலரும் மற்ற அதிகாரியை விரல் நீட்டி விட்டு வேலை செய்யாமல் இருக்கிறார்கள்.
இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் எதைச் சொல்லியும் வட்டார, ஒன்றிய, தாலுகா அதிகாரிகளைத் திருத்தவே முடியவில்லையே என்ற சங்கடத்தில் இந்த மாவட்டத்தை விட்டுச் சென்றுவிட நினைக்கிறார்.
நல்ல அதிகாரிகள் எல்லாம் இப்படி இடம் விட்டு இடம் நகர்ந்தால் மக்கள் பிரச்சினைகளை யார்தான் தீர்க்க முடியும்? வேலைசெய்யாத அதிகாரிகளாலும் அலுவலர்களாலும் மாவட்ட ஆட்சியருக்குத்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது” என்றார்.
இதுகுறித்து கலெக்டர் அருணாவிடமே பேச முயன்றோம். அவர் தரப்பில் சிலர் நம்மிடம், “ஆட்சியர் விருப்ப மாற்றம் கேட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் சரியாக இல்லை என்பதற்காகவா வேறு காரணங்களா என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தனது அரசு வாகனத்தை அலுவலகத்தின் முன்புறம் நிறுத்துவதே கிடையாது” என்றனர் ஆதங்கமாக.
