• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

‘வணங்கான்’ படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா.

Byஜெ.துரை

Jan 9, 2025

“ரகசியத்தை வெளியே சொன்னால்..?‘ ; வணங்கான் படத்தின் கதையை உடைத்த இயக்குநர் பாலா. பொங்கல் பண்டிகை வெளியீடாக ‘வணங்கான்’ திரையரங்குகளில் நாளை (ஜனவரி-10) வெளியாகிறது.

சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்தப்படம் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்களின் அடிப்படையிலானது. இயக்குநர் பாலாவின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை. இதுவரை திரையில் நாம் பார்த்திராத எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களது இன்னொரு பக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்துபவை. வணங்கான் படமும் அப்படி ஒரு படைப்பாகத்தான் உருவாகியுள்ளது.

உங்களுக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை வெளியில் சொன்னால் பத்து பேருக்கு பாதிப்பு வரும். ஆனால் சொல்லாமல் மனதிலேயே பூட்டிக்கொண்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சூழலில் என்ன முடிவெடுப்பீர்கள் என்பது தான் வணங்கான் படத்தின் ஒன் லைன் கதை.

அருண்விஜய் இந்தப் படத்திற்காக தன்னை இதுவரை இல்லாத அளவில் அப்படியே மொத்தமாக உருமாற்றிக்கொண்டுள்ளார்.

தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் விதமாக படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘வணங்கான்’ மூலம் மீண்டும் ஒருமுறை அதை நிரூபிக்க தயாராகி வருகிறார்.

கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், மற்றொரு நாயகி ரித்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் நேத்தாவின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார்.

கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார்.

இயக்குநர் பாலா தனது திரையுலகப் பயணத்தில் 25வது வருடத்தில் இருக்கிறார். ஆனால், “நான் சினிமாவில் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. அதில் எனக்கு திருப்தியும் இல்லை.. ஆனால் என் படங்கள் வந்த பிறகு தமிழ் சினிமாவில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டதாக பலர் சொலும்போது சின்னதாக ஒரு சந்தோசம். ஆனால் அதற்காக நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை” என்கிறார் தன்னடக்கத்துடன்.

வணங்கான் ஜாலியாகத் தொடங்கி, முடியும்போது கனத்த மௌனத்தை படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்படுத்தும் என்பது உறுதி. சக மனிதர்களிடையே கவனிக்கத் தவறும் இயல்புகளை காட்சிப்படுத்துவதில் மிக நுணுக்கமாக கையாள்பவர் இயக்குநர் பாலா.

அந்த வகையில் பார்வையாளர்களுக்கான தித்திப்பான பொங்கலாக வணங்கான் அமையும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தமிழர் திருநாளை முன்னிட்டு தொடங்கும் விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டு நாளை (ஜன- 10-2025) வெளியாகிறது “வணங்கான்”.