கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் மாதாவின் நெற்றியில் இருந்து எண்ணை வடிவதாக செய்தி பரவியதை தொடர்ந்து, ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் சுமார் 200 ஆண்டு பழமை வாய்ந்த உபகர மாதா ஸ்ரூபம் தற்போதைய ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள புரதானமான பழைய கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் மாதாவின் நெற்றியில் இருந்து எண்ணை போன்ற ஒரு திரவம் வடிவதாக இதனை பராமரிக்கும் கோவில் ஊழியர்கள் இங்குள்ள பங்கு தந்தையிடம் அருட்பணி உபால்டிடம் தெரிவித்தனர்.

பங்குத்தந்தை உபால்டு மற்றும் ஊர் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர். எனினும் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் அவ்வாறு வடிந்ததாக கூறப்படும் திரவத்தை சுத்தம் செய்ய அறிவுறுத்தினர். அதன்படி அந்த திரவம் சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இந்தத் திரவம் மாதாவின் நெற்றியில் இருந்து வடிந்து கொண்டிருப்பதாக அதனை பராமரிக்கும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இத்தகவல் காட்டுத் தீ போல் நேற்று இரவில் இருந்து பரவியது. இதனைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான இறை மக்கள் வாகனங்களில் வந்து மாதாவை பார்த்து ஆராதனை செய்து வருகின்றனர். இந்த செய்தி இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய திருத்தல பங்குத்தந்தை உபால்டு- இடம் கேட்டபோது இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இன்னும் ஓரிரு தினங்கள் கவனித்து அதன்பின்னர் ஒரு முடிவு எடுத்து மக்களுக்கு அறிவிப்போம். எனினும் இது குறித்து உறுதியான தகவல்கள் எதையும் தற்போது வெளியிட விரும்பவில்லை. உரிய துறை வல்லுனர்கள் வந்து பரிசோதனை செய்து, அதன் பின் இதைப்பற்றி தகவல்கள் வெளியிடப்படும் என்றார்.