கட்டுமானப் பொருள்களான எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் சுமார் 450 கிரசர்களுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் என்னும் செயற்கை மணல் உற்பத்தி செய்து விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட கிரசர்கள் அனுமதி பெறாமல், தரமற்ற கற்களை அரைத்து எம்.சாண்டாக விற்பனை செய்து வருகின்றன.
ஆற்று மணல் கிடைக்காத நிலையில், வீடு மற்றும் கட்டிடங்களுக்கு தரமற்ற எம்.சாண்ட் பயன்படுத்தும்போது உறுதித் தன்மையில்லாமல் கட்டிடம் இடிந்து விழுந்து சேதம் ஏற்படுகிறது. எனவே, விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரி கிரசர்கள், கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமலாக்கத்துறை சோதனையால் மணல் குவாரி இயங்காத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, கல்குவாரி கிரசர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து, எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லியை அதிகவிலைக்கு விற்கின்றனர். கடந்த 25-ம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.1,200 வரை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படுவர். இந்த விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை
