• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

டெல்லி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்

டெல்லியில் நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு தாமதத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர். நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி 3 மாதங்கள் கடந்தும் கலந்தாய்வை நடத்தாமல் ஒன்றிய அரசு தாமதம் செய்வதை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலந்தாய்வை உடனடியாக நடத்தக்கோரி டெல்லியில் ஷாகித் பூங்காவில் இருந்து உச்சநீதிமன்றம் நோக்கி நேற்று மருத்துவர்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது அவர்களை இடைமறித்த போலீசார், குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதில் மருத்துவர்கள் காயமடைந்ததை கண்டித்து பொதுமருத்துவமனையில் உள்ள பயிற்சி டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பயிற்சி மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து சேவைகளும் மீண்டும் தொடரும் என்பதால் நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.