விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, பெரியகுளம் கண்மாய் மீன் பாசி உரிமையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் வளத்துறையினரிடமிருந்து, வத்திராயிருப்பு – மேலப்பாளையம் ஊர் நிர்வாகத்தினர் ஏலம் எடுத்தனர். ஊர் நிர்வாகத்திடமிருந்து கூமாபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்தாண்டு மீன் பாசி உரிமையை குத்தகைக்கு எடுத்து மீன்களை வளர்த்து வந்தார். கடந்த ஆண்டு மீன்கள் பிடிப்பதற்கு முன்பாகவே கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்த காரணத்தால் மீன்களை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டும் ராமச்சந்திரனுக்கு மீன்பிடி குத்தகையை ஊர் நிர்வாகம் வழங்கியிருந்தது. அவர் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விட்டு வளர்த்து வந்தார். தற்போது கண்மாய் மீன்கள் நன்கு வளர்ச்சி பெற்று பிடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், பெரியகுளம் கண்மாய் உரிமை யாருக்கு சொந்தம் என்பது குறித்து பொதுப்பணித்துறைக்கும், வத்திராயிருப்பு இந்து உயர்நிலைப்பள்ளி சத்திரம் கமிட்டி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தற்போது மீன்பிடி காலம் வந்ததையடுத்து மீன்பாசி குத்தகைதாரர் மீன் பிடிக்கச் சென்ற போது, மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீதிமன்ற வழக்கை காரணமாகக்கூறி மீன் பிடிக்க தடை விதித்தனர். தற்போது கண்மாயில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதாலும், கோடை வெயில் கடுமையாக இருப்பதாலும் கண்மாயில் உள்ள மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. கண்மாய்க்கரைகளில் செத்து மிதக்கும் மீன்களால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு, விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் பாசி குத்தகைதாரர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.