கடந்த 2020ஆம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தை கௌதம் மேனன், சுஹாசினி, சுதா கொங்கரா, ராஜீவ்மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என 5 இயக்குனர்கள் 5 வித்தியாசமான கதைகளை உருவாக்கி இருந்தார்கள்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மீண்டும் புதிய ஆந்தாலஜி திரைப்படமாக புத்தம் புது காலை விடியாதா என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ரிச்சார்ட் ஆன்டனி, பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா மற்றும் சூரிய கிருஷ்ணா ஆகியோர் 5 வெவ்வேறு கதை களங்களில் உருவாக்கி இருக்கிறார்கள்.
5 வித்தியாசமான கதை கொண்ட இப்படத்தில் நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் தாஸ், நதியா, லிஜோமோல் ஜோஸ், ஐஸ்வர்யா லட்சுமி, கௌரி கிஷன், மணிகண்டன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், சனந்த், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 14ம்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது.