• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்த டிட்வா புயல்..,

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்துவிட்டது. டிட்வா புயல். பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். உலக நாடுகளின் ஆதரவுக்கரம் நீள்கிறது. அம்மக்கள் மீண்டு வர விரும்புவோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல்,
விடுபட்டு விடுபட்டு இருப்பதே கிழக்குத் தொடர்ச்சி மலை. ஏன் அப்படி இருக்கிறது?

மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஆறுகள் கடலை அடைவதற்கு தடையாக இருந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகளை அறுத்து தள்ளிவிட்டு கடலில் போய் சேர்ந்தன.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி என பல ஆறுகளுக்கும் இவ்வரலாறு உண்டு என்கிறது நிலவியல் ஆய்வுகள்.

நீலகிரியில் சந்திக்கிறது கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள். அதன் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலைகள் குமரிக்கடல் வரை தொடர்கிறது. ஆனால், திருவண்ணாமலை வரை வரும் கிழக்குத் தொடர்ச்சி மலை திடீரெனக் காணாமல் போய் விடுகிறது.

திருவண்ணாமலையில் காணாமல் போன மலை எங்கே என்று தேடினால், அது ஈழத்தீவாக கடலில் எட்டிப்பார்க்கிறது. இப்போது இலங்கை என்கிறார்கள். இலங்கையை ஸ்ரீலங்கா என்று அழைக்கிறார்கள்.சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீ எப்படி வந்து ஒட்டிக்கொண்டது? ஸ்ரீ என்பது காலங்காலமான பூர்வகுடிகளின் இருப்பிடங்களைத் தனதாக்கி உரிமை கோரும் ஒட்டுண்ணி தான்.

இலங்கை வரலாறுக்கு அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்படுவது மகாவம்சம். இலங்கை பவுத்த வரலாற்றின் மூலநூலாகிய இதுவும், இலங்கைத்தீவை தாமிரபரணி என்று தான் அழைக்கிறது. அசோகரின் பாறைக்கல்வெட்டுகளிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இங்கு தாமிரபரணிக்கரையில் திருநெல்வேலி இருப்பதுபோல்.
இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி உள்ளது.இப்பொழுது யாழ் பல்கலைக்கழகம் இங்குதான் செயல்படுகிறது.

காலங்காலமாக ஆறுகளால் அறுத்தெறியப்பட்ட நிலப்பரப்புகளின் வரலாறு வைகையிலும் ஏராளம். வைகை இலங்கை வரை பாய்ந்த வரலாறும் அதன் தொடர்ச்சி தான்.

வேதாரண்யமும், யாழ்ப்பாணமும் ஒரே நேர்கோட்டில் ஒரே நிலப்பாதை தான். இன்றும் வேதாரண்யத்தில் யாழ்ப்பாணத்தெரு உண்டு. கடலால் மூழ்கடிக்கப்பட்டது. ஆதாரம் முதல் கமெண்டில்.

பல்வேறு ஊழி காலங்களைக் கடந்தே நிலப்பரப்புகள் இன்றைய வடிவத்திற்கு வந்தது. பிலைஸ்டோசீன் ஊழியான பனிப்படர்வு ஊழி காலம் முடிந்து கி.மு.8000 த்தில் ஹோலோசீன் ஊழிக்காலம் தொடங்குகிறது. தற்கால மனிதர்கள் நாகரிக வாழ்க்கையைத் தொடங்கிய காலம் இதுதான்.

பனிப்படர்வுகள் விலகி வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகததொடங்கி கடல்மட்டம் உயர்ந்தது. இலங்கையும் இந்தியாவும் பனிப்படர்வு ஊழிக்காலம் வரை ஒரே நிலப்பரப்பாக இருந்த பகுதி தான். கி.மு.8000 த்தில் ஏற்பட்ட கடல்மட்ட உயர்வால் இரண்டாகப் பிரிந்தது. இக்காலத்தில் தான் பிரிட்டனும்,ஐரோப்பாக்கண்டமும் துண்டிக்கப்பட்டன.