• Sun. May 12th, 2024

கோவை புறநகரில் 500 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு – மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி

BySeenu

Dec 26, 2023

ஊருக்கு வெளியே வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மூத்த குடி மக்களின் அலை பேசிகளில் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் ஸ்பீட் டயலில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கலைக் கண்காணிக்க ஏதுவாக காவல் நிலைய வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒன்றிணைந்த சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது.

இதனை கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், காவல் ஆய்வாளர் மாதையன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

பின்னர் ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குற்றங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளன. கோவை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள 500 சிசிடிவி கேமராக்களுக்கு ஒரே இடத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கு காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதை முதன்மையாக கொண்டு காவல்துறை இயங்கி வருகிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்கு வெளியே வீடுகள் கட்டியுள்ள 4000க்கும் மேற்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அங்கு வாழும் மூத்த குடிமக்களுக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களின் அலைபேசி எண்களை வழங்கியுள்ளோம். மேலும் மூத்த குடிமக்களின் அலைபேசியில் ஸ்பீடு டயலில் காவலர்களின் தொடர்பு எண்களை பதிவு செய்துள்ளோம். ஆபத்து காலத்தில் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ள இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும். அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைய வாய்ப்புகள் உள்ளன. சிசிடிவிகள் அமைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பொதுமக்களும் காவல்துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *