தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி திண்டுக்கல் மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர தினமும் 3ஆயிரத்திற்கும் அதிகமான .புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தனியார் ஏஜென்சி மூலம் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணிகள் மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பிடித்தம் போக ரூ.12 ஆயிரத்து 500 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் வேறொரு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டனர். புதிதாக வந்த ஏஜென்சி நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.15,000 ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்கியது. இந்நிலையில் இந்த மாதம் ரூ.12500 சம்பளம் மட்டுமே ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் தனியார் ஏஜென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பழைய ஏஜென்சி நிர்வாகம் வழங்கி வந்த சம்பளத்தை தான் நாங்கள் வழங்குகிறோம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக வழங்கி வந்த 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்தால் மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களிடம் மருத்துவமனை நிர்வாகமும் தனியார் ஏஜென்சி நிர்வாகமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.





