• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அழகர் கோயிலுக்கு நெல் கோட்டை கட்டுதல் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Jan 21, 2024

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் ஆண்டுதோறும் முதல் அறுவடை நெல் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமம் மிகவும் வரலாற்றுப் புகழ் பெற்றது. மிகவும் சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரை திருவிழா இங்கு நடந்ததாகவும், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் தேனூர் வைகை ஆற்றில் இறங்கியதாகவும், இங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர். இது குறித்து இந்தக் கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

தேனூர் கிராமம் சுந்தரராஜபெருமாள் அழகுமலையான் உள்ள கிராமம் எங்கள் தேனூர் கிராமம். இங்கு தை மாதம் முதலில் அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் அழகர் கோயிலில் உள்ள கள்ளழகருக்கு நெல் கோட்டையாக கட்டி கிராம வழக்கப்படி அனுப்பி வைக்கின்றோம். இதேபோல் இந்த ஆண்டு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த எம் சோனை முத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்த வருடம் தை மாதம் முதல் நெல் அறுவடை செய்துள்ளார். இவர்கள் தங்களின் நெல்லை அழகர்கோவில் கள்ளழகர்க்கு நெல் கோட்டை கட்டுவதற்கு எங்கள் கிராம தேவதை சுந்தரவல்லி அம்மன் கோவில் முன்பாக நேற்று மாலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோனை முத்து நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் குவிக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை,பொங்கல் வைத்து வழிபட்டோம். பின்னர் இங்குள்ள குவிக்கப்பட்ட நெல் குவியலுக்கு பூமாலை அணிவித்து,சந்தனம், குங்குமம் தெளித்து முறைப்படி பூஜைகள் செய்தனர்.பின்னர் வைக்கோலால் தயாரிக்கப்பட்ட திரி நெல் கோட்டை தயார் செய்து இதில் விவசாயி கோவிலுக்கு சேரவேண்டிய நெல்லை கோட்டையில் கொட்டினார். இதை கிராம வழக்கப்படி கண்மாய் மடை திறப்பாளர் மடையன் கருப்பு பாரம்பரிய வழக்கப்படி நெல் கோட்டையைக் கட்டினார். இதற்கு சந்தனம் தெளித்து மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் உடைத்து பூஜைகள் செய்தனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார்கள். கிராம வழக்கப்படி ஏழு கரக காரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கருப்பு நெல் கோட்டை எடுத்துக்கொண்டு இங்கு உள்ள பெருமாள் கோவிலில் இரவு தங்குவதற்காக வைத்துள்ளனர். மறுநாள் (இன்று)அதிகாலை நெல்கோட்டையை கருப்பு எடுத்துக் கொண்டு நடந்து அழகர்கோவில் சென்று அங்கு கள்ளழகருக்கு நெல் கோட்டையை ஒப்படைப்பார். இதை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கோவில் மரியாதை செய்வார்கள். இது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் இக்கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோனை முத்து, எம். முத்து நாயகம் மற்றும் விவசாயிகள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.