• Fri. Apr 26th, 2024

பாஜகவுக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு

2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால் மம்தா பானர்ஜிக்கு இது பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்திதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில் திமுக தலைவரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது பல எதிர்க்கட்சிகள் இதனை ரசிக்காமல் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டன. ஆனாலும் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தது. அத்தேர்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று மத்தியில் 2-வது முறையாக ஆட்சியை அமைத்தது.

இதன்பின்னர் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் தேசிய அளவிலான அரசியலில் புதிய அணிக்கான முன்னெடுப்புகள் சற்று தொய்வடைந்திருந்தன. இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தல்களில் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சியைக் கைப்பற்றி முதல்வரானார் மு.க.ஸ்டாலின். மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. மமதா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதல்வரானார்.

மேற்கு வங்க தேர்தலைப் பொறுத்தவரையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறி வந்தன. ஒருசில கணிப்புகள், பாஜகவே ஆட்சி அமைக்கலாம் எனவும் தெரிவித்தன. ஆனால் பாஜக எதிர்பார்த்தது நடக்கவில்லை. மம்தா பானர்ஜி விஸ்வரூப வெற்றியைப் பெற்றார்.

அப்போது முதல் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்கும் முயற்சிகளை அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். டெல்லிக்கு 2 முறை பயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி அங்கேயே தங்கி பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடக்கத்தில் காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்கிற முயற்சிதான் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு மாற்றாக திரிணாமுல் காங்கிரஸ் என்கிற நிலை உருவானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கடுப்பாகிப் போனது. குறிப்பாக காங்கிரஸ் செல்வாக்கு கொண்ட அம்மாநிலத்தில் பாஜக தம் பங்குக்கு சித்து விளையாட்டை அரங்கேற்றியது.

இதனைத் தொடர்ந்து மமதா பானர்ஜியின் எஞ்சிய காங்கிரஸ் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸில் இணைத்தார். காங்கிரஸில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதனால் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையேயான உறவில் விரிசல் அதிகமானது. மும்பையில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவாரை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரஸுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார்.

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின், அதாவது மாநில கட்சிகளின் கூட்டணி குறித்து பேசினார். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதே இப்போது இல்லை என்றார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் மீது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது பாஜகவுக்குதான் சாதகம் என விமர்சிக்கப்பட்டது. மம்தா பானர்ஜியை பாஜகவின் பி டீம் எனவும் முத்திரை குத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக லோக்சபா குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மமதா பானர்ஜியின் முயற்சிகளை கடுமையாக தமது கட்சி எதிர்ப்பதாக விளக்கம் அளித்தார்.


இதனைத் தொடர்ந்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தேசிய அரசியலில் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை அமைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை திமுக ஆதரிக்கக் கூடாது.

காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணியால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். ஆகையால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனின் பேச்சுக்கு நான் கட்டுப்பட்டவன்; இதற்கு மேல் எந்த விளக்கமும் தேவை இல்லை என கூறியிருந்தார். அதாவது காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி முயற்சியை திமுக நிராகரிக்கிறது என்பதையே முதல்வர் ஸ்டாலின் அப்படி சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைத்தான் திமுக ஆதரிக்கிறது. ராகுல் காந்தியையே திமுக, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் என கூறியிருக்கிறார்.


திமுகவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, காங்கிரஸ் இல்லாத பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்கலாம் என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். தயவு செய்து அப்படிப்பட்ட முயற்ச்சிக்கு திமுக துணை போய்விடக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை கட்டினால் அது பாஜகவுக்கு சாதகமாக முடியும்’ :

தொல்.திருமாவளவன் அவர்களின் இந்த பேச்சிலிருந்து மூன்று விஷயங்கள் தெளிவாகிறது.

1. காங்கிரஸ் – திமுக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

2. திரு. தொல் திருமாவளவனுக்கு பாஜகவின் வளர்ச்சியை கண்டு அச்சம் அதிகமாகியுள்ளது.

3. பாஜக வளர்வதை தடுக்க, ஒன்றரை லட்சம் ‘தமிழர்களை’ கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே முக்கியம், அதாவது தமிழினத்தை விட ‘அரசியல் அதிகாரம் மற்றும் ஆதிக்கமே’ முக்கியம் என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உள்ளார் தமிழா! தமிழா! இதுவல்லவோ தமிழின துரோகம்?என விமர்சித்துள்ளார்.


பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளில் முக்கியமானது திமுக. மம்தா பானர்ஜியின் காங்கிரஸ் அல்லாத கூட்டணி முயற்சியை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *