• Fri. Apr 26th, 2024

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

ByKalamegam Viswanathan

Apr 2, 2023

ராஜபாளையத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கருப்பு கொடி காட்டுவதற்கு முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். ராஜபாளையம் நகருக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவதற்கு முயற்சி செய்தனர். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டான பகுதியில், கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு வந்து கோ பேக் ஆளுநர் என்று முழக்கமிட்டனர். தமிழக அரசு இயற்றிய
ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து, சட்டங்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை கண்டித்தும், பொதுவுடமை சிந்தாந்தம் எழுதி, பேசி வந்த மார்க்ஸ் அவர்களின் சிந்தனையை கேலி செய்யும் வகையில் ஆளுநர் அவதூறாக பேசியதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் முழக்கங்களை எழுப்பினர். ஆளுநர் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோ பேக் ரவி என்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று கருப்பு கொடி காட்ட முயற்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர் 60க்கும் மேற்பட்டவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர். ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற சம்பவம், ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *